விவசாய நிலம் பகுதியில் வெடிமருந்து கிடங்கு அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

ஆலங்குளம் அருகே விவசாய நிலம் பகுதியில் வெடிமருந்து கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
விவசாய நிலம் பகுதியில் வெடிமருந்து கிடங்கு அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
Published on

தென்காசி,

ஆலங்குளம் தாலுகா துப்பாக்குடி அருகே உள்ள ராவுத்தபேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் ராவுத்தபேரியில் விவசாய நிலங்களுக்கு அருகில் சிலர் வெடிமருந்து கிடங்கு அமைக்க இருப்பதாக தகவல் அறிந்தோம். இதுகுறித்து பொதுமக்களிடம் எவ்வித கருத்தையும் கேட்கவில்லை. இதனை அமைத்தால் அங்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

த.மு.மு.க.

தென்காசி மாவட்ட த.மு.மு.க. (ஹைதர் அலி அணி) தலைவர் ஜமால்தீன் கொடுத்துள்ள மனுவில், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வாகன ஓட்டுனர்களும் கொரோனா காரணமாக வாகன வரி மற்றும் தகுதி சான்று பெறுவதற்கு மிகவும் சிரமத்தில் உள்ளனர். அன்றாட தேவையான உணவின் தேவையை பூர்த்தி செய்வதே கஷ்டமாக உள்ளது. இந்த நிலையில் வாகனத்திற்கு வரி செலுத்த மற்றும் தகுதி சான்று பெற அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் செலுத்த செல்லும்போது வாகனத்திற்கு ஒளிரும் ஒளிப்பட்டை ஒட்டினால்தான் தகுதி சான்று வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த ஒளி பட்டைகளை விற்பனை செய்பவர்கள் அதிகமான விலைக்கு விற்கிறார்கள்.

எனவே ஒளிரும் பட்டைகளை அதிகமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவி மற்றும் மீட்டர் போன்றவற்றின் விலைப்பட்டியலை வெளிப்படையாக தகவல் பலகையில் அறிவிப்பு செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அப்போது மாவட்ட தலைவர் கோக்கர் ஜான் ஜமால், துணைச் செயலாளர் சலீம், பொருளாளர் செங்கை ஆரிப் உட்பட பலர் உடன் இருந்தனர்.

மனிதநேய மக்கள் கட்சி

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் காதர் கொடுத்துள்ள மனுவில், செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் புதுமனை தெருவில் பொதுமக்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு நடுவில் செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அப்போது மாநில செயலாளர் மைதீன் சேட் கான், மாவட்ட தலைவர் முகமது யாகூப், மாவட்ட செயலாளர் அகமது ஷா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com