

பந்தலூர்,
பந்தலூர் அருகே உள்ள வாழவயல் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடிநீர் கேட்டு தேவாலா-கரியசோலை சாலையில் வாழவயல் முருகன் கோவில் அருகில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீசார் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று இரவு 7.30 மணிக்கு சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.