

பழனி
பழனி அருகே மேலக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது எவிசன் நகர். பழனி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்ட போது அங்கு வசித்தவர்களுக்கு எவிசன் நகரில் குடியிருப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. 140-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பகுதியில் வசிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக எவிசன் நகரில் ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. திறந்தவெளி மற்றும் வீடுகளுக்குள் கூட்டமாக ஈக்கள் மொய்க்கின்றன.
மேலும் வீடுகளில் வைக்கப்படும் உணவு பொருட்களையும் ஈக்கள் மொய்க்கின்றன. இதனை சாப்பிடும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் எவிசன் நகர் பகுதியில் செயல்படும் கோழிப்பண்ணையில் இருந்து குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் கழிவுகளாலேயே ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளது அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது.
அதையடுத்து குடியிருப்பு பகுதியில் கோழிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்திருந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை பழனி-வாகரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோழிப்பண்ணை கழிவுகளை குடியிருப்பு பகுதியில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
இதற்கிடையே அந்த வழியாக கோழிப்பண்ணை உரிமையாளர் வருவதை பொதுமக்கள் பார்த்தனர். உடனே அவரை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜா, கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பேசிய பொதுமக்கள், கோழிப்பண்ணை உரிமையாளர், ஊராட்சி முன்னாள் தலைவர் என்பதாலும், அ.தி.மு.க. பிரமுகர் என்பதாலும் அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். இதனால் நாங்கள் தான் பாதிப்புக்கு ஆளாகிறோம். எனவே குடியிருப்பு பகுதிக்குள் இனிமேல் கோழிக்கழிவுகளை கொட்டக்கூடாது என்றனர். அதன் பின்னர் கோழிப்பண்ணை நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோழிக்கழிவுகளை குடியிருப்பு பகுதியில் கொட்டக்கூடாது.
அதனையும் மீறி கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவது தெரியவந்தால் மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறையினர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பேசிய கோழிப்பண்ணை நிர்வாகிகள் இனிமேல் குடியிருப்பு பகுதியில் கோழிக்கழிவுகள் கொட்டப்படாது என உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். ஆனாலும் தங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.