ஒரத்தநாடு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

நிவாரண பணிகள் நடைபெறவில்லை என்று கூறி ஒரத்தநாடு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒரத்தநாடு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
Published on

ஒரத்தநாடு,

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள வீடுகள், தென்னை, தேக்கு, சவுக்கு உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்தன. மேலும் இந்த புயலின்போது பெரும்பாலான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கிராமபுறங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள பல கிராமங்களில் பொதுமக்கள் குடிதண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்காக மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண பணிகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி நேற்று ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடிகீழையூரை சேர்ந்த எலந்தவெட்டி கிராம மக்கள் செட்டிமண்டபம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைப்போல ராஜாளிவிடுதி, ஆர்சுத்திவிடுதி உள்ளிட்ட கிராம மக்கள் திருவோணம் அண்ணாசிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். மேலும் கக்கரைகோட்டை, ஊரணிபுரம் ஆகிய ஊர்களிலும் நிவாரண பணிகள் நடை பெறவில்லை என்று கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைப்போல ஒரத்தநாடு பகுதியில் மேலும் சில ஊர்களிலும் கிராம மக்கள் நிவாரண பணிகள் நடைபெறவில்லை என்று கூறி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஒரத்தநாடு அண்ணாநகரில் வசித்த மக்களின் 80 குடிசை வீடுகள் கஜா புயலில் சிக்கி முற்றிலும் சேதமடைந்து. மேலும் நேற்று முன்தினம் பெய்ந்த பலத்தமழையின் காரணமாக அந்த பகுதி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த பகுதிக்கு இதுவரை நிவாரண பணிகள் செய்துதரவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறினர். இதனால் இங்குள்ள மக்கள் இருக்க இடம் இல்லாமல் குடிசைக்கு அருகில் உள்ள சாலையில் தங்கி உள்ளனர். எனவே இந்த பகுதியில் அதிகாரிகள் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com