கடலூரில் தற்காலிக கடையில் மீன் வாங்க பொதுமக்கள் அலைமோதல்

கடலூரில் தற்காலிக கடையில் மீன் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கடலூரில் தற்காலிக கடையில் மீன் வாங்க பொதுமக்கள் அலைமோதல்
Published on

கடலூர்,

கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் காய்கறி, பழக்கடைகள் தனி இடம் ஒதுக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. இதுதவிர மீன்வளத் துறையின் சார்பில் மாவட்டத்தில் 16 இடங்களில் தற்காலிக மீன் கடைகள் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அந்தவகையில் கடலூரில் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் செல்லும் வழியில் உப்பனாற்றின் குறுக்கே உள்ள பாலம் அருகில் மீன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் கடை தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது. இங்கு காலை நேரத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீன் வாங்க திரண்டு நிற்கும் பொது மக்களைப் பார்க்கும்போது அந்தப் பகுதியே திருவிழா கூட்டம் போல காட்சியளிக்கிறது.

சமூக இடைவெளி

தற்போது மீன்பிடி தடைகாலமாக இருந்தாலும் கட்டு மரம் மற்றும் சிறிய நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். உப்பனாற்றின் அருகிலேயே தற்காலிக மீன் கடை அமைந்திருப்பதால் இது கடலுக்குள் சென்று மீன் பிடித்து வரும் மீனவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை படகுகளில் நேரடியாக அங்கேயே கொண்டு வருகிறார்கள். பின்னர் அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி அங்கேயே வைத்து விற்பனை செய்கிறார்கள். பொதுமக்களும் மீன்களை சில்லரையாகவும், பலர் குழுவாக சேர்ந்து ஏலம் பிடித்தும் மீன்களை வாங்கிச் செல்வதை காணமுடிகிறது.

ஊரடங்கு காரணமாக சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக மீன்பிடிக்க செல்ல முடியாமல் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், மீன் சாப்பிட முடியாமல் இருந்த பொது மக்களுக்கும் இந்த தற்காலிக மின் கடை ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது. இருப்பினும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் முன்கூட்டியே எடுக்க வேண்டும். இல்லையெனில் சென்னைக்கு கோயம்பேடு மார்க்கெட் போன்று, கடலூருக்கு இந்த மீன் விற்பனை செய்யும் இடமும் மாறிவிடும். இதை உணர்ந்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட முன்வர வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com