கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்
Published on

கடத்தூர்,

கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகியவற்றுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளால் இதை கட்டுப்படுத்த முடியவில்லை. பொதுமக்கள் அனைவரும் 21 நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார்.

தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று வருகிறார். வீடுகளில் தனித்து இருப்பதன் மூலம் கொரோனா தொற்றை விரட்ட முடியும். கொரோனா மூலம் யாரும் இறக்கக்கூடாது என்பது இந்த அரசின் குறிக்கோளாக உள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் கண்டறியும் 2 கருவிகள் வழங்கப்பட்டு உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். வாகனங்களில் வருபவர்கள் அத்தியாவசிய தேவைக்காகத்தான் வெளியே வரவேண்டும். ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வுகள் எப்போது தொடங்கும் என்பது குறித்தும், கோடைகால விடுமுறை எப்போது விடப்படும் என்பது குறித்தும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com