

புதுச்சேரி,
புதுவை சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய விளைபொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம், விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி அரசின் தீர்மானத்தை வேளாண் அமைச்சரான கமலக்கண்ணன் கொண்டுவந்தார்.
அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. சுப்ரீம் கோர்ட்டும் மத்திய அரசுக்கு சில அறிவுறுத்தல்களை கூறியுள்ளது. விரைவில் விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பும் நடத்த உள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்தினால் ரூ.35 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் சம்பாதிக்க மத்திய அரசு இந்த சட்டங்களை கொண்டுவந்துள்ளது. பாராளுமன்றத்தில் இந்த சட்டம் தொடர்பாக விவாதிக்கவில்லை என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, இந்த சட்டநகலை நான் ஏற்கனவே கிழித்தெறிந்து உள்ளேன். இப்போதும் இந்த நகலை கிழித்தெறிகிறேன் என்று கூறிவிட்டு தான் கையில் வைத்திருந்த சட்ட நகலை கிழித்தெறிந்தார். இதன்பின்னர் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.