

3-வது நாளாக போராட்டம்
தேசிய சுகாதார இயக்க ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும், சுகாதாரத்துறை காலி பணியிடங்களை தேசிய சுகாதார இயக்க ஊழியர்களை கொண்டு நிரப்பவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுவை தேசிய சுகாதார இயக்க ஊழியர்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 8-ந்தேதி முதல் பணிபுறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.
தலைமை செயலகம் முற்றுகை
அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி தலைமை தாங்கினார். தலைவர் அன்புசெல்வன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் நிர்வாகிகள் ராஜ்குமார், ராதா, கணபதி, ஜானகி, பாக்கியவதி, கலைச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் தலைமை செயலாளர் அஸ்வனிகுமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
தொடர்கிறது
இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) தங்கள் போராட்டம் தொடரும் என்று தேசிய சுகாதார இயக்க ஊழியர்களின் கூட்டமைப்பு செயலாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.