புதுச்சேரியில் மலேரியா பாதிப்பு குறைந்துள்ளது சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தகவல்

புதுச்சேரியில் மலேரியா பாதிப்பு குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் கூறினார்.
புதுச்சேரியில் மலேரியா பாதிப்பு குறைந்துள்ளது சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தகவல்
Published on

புதுச்சேரி,

தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் சார்பில் உலக மலேரியா தினம் குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்ட மாநில அதிகாரி டாக்டர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். பொது சுகாதார துணை இயக்குனர் ரகுநாதன், மலேரியா உதவி இயக்குனர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அதிகாரி அஜ்மல் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன், தேசிய சுகாதார இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் கடந்த வருடம் 54 பேருக்கு மலேரியா காய்ச்சல் பாதிப்பு இருந்தது. அதிலும் 14 பேர்தான் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பக்கத்து மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த வருடம் 2 பேருக்குதான் மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டது.

2020-க்குள் மலேரியாவை முற்றிலும் தடுப்பதுதான் இந்திய அரசின் எண்ணம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரத்து 500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதுவும் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சிக்குன் குனியா பாதிப்பும் மிகவும் குறைந்துள்ளது.

கொசுவினால் பரவும் இந்த நோய்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு மக்களின் கைகளில்தான் உள்ளது. தங்கள் வீடுகளை சுற்றிலும் அவர்கள் கழிவுநீரை தேங்கவிடக்கூடாது. அதேபோல் நன்னீரில் உற்பத்தியாகும் கொசுக்களை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவேண்டும். இவ்வாறு இயக்குனர் ராமன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மலேரியா காய்ச்சலை உருவாக்கும் அனாபிலஸ் கொசுக்களின் மாதிரி மற்றும் கொசுப்புழு வளர்ச்சி மற்றும் கொசு உற்பத்தி ஆகும் இடங்கள், தடுப்பு முறைகள் பற்றிய கண்காட்சி நடந்தது. இதில் கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரி மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இந்த கண்காட்சியினை ஆஸ்திரேலியா மருத்துவ குழுவினரும் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் யசோதா, சுகாதார உதவி ஆய்வாளர்கள் அய்யனார், தாமோதரன், வெங்கட்ராமன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் தொழில்நுட்ப உதவியாளர் செந்தில்வேலன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com