புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பொன்விழா ஆண்டு வளைவு அமைக்கப்படும் பொங்கல் விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பொன்விழா ஆண்டு வளைவு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பொன்விழா ஆண்டு வளைவு அமைக்கப்படும் பொங்கல் விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
Published on

புதுக்கோட்டை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 13 புதிய அதிநவீன அரசு பஸ்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதிய அதிநவீன அரசு பஸ்களை தொடங்கி வைத்தார். பின்னர் புதியதாக தொடங்கி வைக்கப்பட்ட ஒரு பஸ்சில் ஏறி அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கு சென்றார். பின்னர் அங்கு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் விலையில்லா வேட்டி, சேலை, பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட முடியும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட கஜா புயலில் இருந்து பொதுமக்களை விரைவாக மீட்டெடுக்கும் வகையில் இரவு, பகல் பாராது மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சாரம், குடிநீர்வசதி போன்ற பல்வேறு அடிப்படை தேவைகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை விரைவாக மீட்டெடுக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவிகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் இந்த கல்லூரி கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதையொட்டி பொன்விழா ஆண்டு வளைவு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், இருக்கைகளுடன் கூடிய பெரிய அரங்கம் அமைக்கப்படும். இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். இதில் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் புவனேஷ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோவன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com