மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை தரிசனம் செய்வதால் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சமய மாநாடு, வில்லிசை, பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

6-ம்நாள் விழாவில் இரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜையும், 9-ம் நாள் விழாவில் இரவு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் ஆகியவையும் நடந்தது.

10-ம் திருவிழாவான நேற்று முக்கிய பூஜையான ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்தனர். இதனால், கடற்கரை செல்லும் சாலை, மணலிவிளை, லெட்சுமிபுரம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.

ஒடுக்கு பூஜையையொட்டி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களபம், சந்தனக்குடம் பவனி எடுத்து வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், 4.30 மணிக்கு அடியந்தர பூஜை, குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்குபூஜை தொடங்கியது. பூஜையையொட்டி மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தா கோவிலில் இருந்து பூசாரிகள் 21 வகையான உணவு பதார்த்தங்களை 9 மண் பானைகள் மற்றும் பெட்டிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலம் கோவிலை அடைந்ததும் அம்மனுக்கு பதார்த்தங்கள் படைக்கப்பட்டன. இதற்கிடையே குருதி கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைதொடர்ந்து ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடந்தது.

விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 250-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com