வாங்கல் குப்புச்சிபாளையத்தில் ரூ.3 கோடியில் புதிய துணை மின்நிலையம்

வாங்கல் குப்புச்சிபாளையத்தில் ரூ.3¾ கோடியில் புதிய துணை மின்நிலையம் திறக்கப்பட்டது.
வாங்கல் குப்புச்சிபாளையத்தில் ரூ.3 கோடியில் புதிய துணை மின்நிலையம்
Published on

கரூர்,

வாங்கல் குப்புச்சிப்பாளையம் ஊராட்சியில் புதிய துணை மின் நிலையத்தை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். அந்த துணை மின்நிலையத்தை மாவட்ட கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு மின் வினியோகத்தை தொடங்கி வைத்து நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார். இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

வாங்கல் குப்புச்சிப்பாளையம் கிராமத்தை சுற்றியுள்ள வாங்கல், கருப்பம்பாளையம், சிந்தாயூர், செவ்வந்திபாளையம், துவரம்பாளையம் மற்றும் என்.புதூர் ஆகிய பகுதிகளுக்கு 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மண்மங்கலம் துணை மின் நிலையம் மூலம் மின் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது. இதனால் குறைந்த மின்அழுத்தம் நிலவியதன் காரணமாக விவசாய மோட்டார்களும், குடிநீர் பயன்பாட்டிலுள்ள மோட்டார்களும், வீட்டு உபயோகப்பொருட்களும் அடிக்கடி பழுதடைந்து வந்தது.

இதைத்தடுக்க உயர் அழுத்த மின் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் தீன்தயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜ்னா திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 71 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் புதிய துணை மின்நிலையம் இப்பகுதிக்கு பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் 16 கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள 74 குக்கிராமங்கள் பயனடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா, தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் வினோதன், செயற்பொறியாளர் செந்தாமரை, உதவி செயற்பொறியாளர்கள் ரவிச்சந்திரன், சரவணப்பெருமாள், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com