பைக்காரா, சிங்காரா வனப்பகுதியில் திடீர் தீ விபத்து

பைக்காரா, சிங்காரா வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசம் அடைந்தது.
பைக்காரா, சிங்காரா வனப்பகுதியில் திடீர் தீ விபத்து
Published on

ஊட்டி,

ஊட்டி-கூடலூர் சாலையில் கிளன்மார்கன் மின்வாரிய அலுவலகம் உள்ளது. பைக்காரா அணையில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் கிளன்மார்கன் அணைக்கு கொண்டு செல்லப்பட்டு, செங்குத்தான மலைப்பகுதியில் குழாய்கள் மூலம் சிங்காரா மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இப்பகுதி நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பைக்காரா வனப்பகுதியாகும்.

கிளன்மார்கன் அணையின் பின்பகுதியில் கரியப்பா அணையையொட்டி உள்ள வனப்பகுதியில், பைக்காரா அணையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்லும் உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது. இந்த நிலையில் நேற்று அந்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததால் எதிர்பாராதவிதமாக பைக்காரா வனப்பகுதியில் தீப்பிடித்தது.

இதுகுறித்து வனத்துறையினர் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து பைக்காரா வனச்சரகர் பால்ராஜ் தலைமையில், அவலாஞ்சி, நடுவட்ட வன ஊழியர்கள், பைக்காரா மற்றும் 9-வது மைல் மின்வாரிய ஊழியர்கள் 50 பேர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுத்தீ பரவுவதை தடுக்க தீத்தடுப்புக்கோடுகள் அமைத்தனர்.

தீ சீகை மரங்களில் பற்றி எரிந்ததால் வேகமாக பரவியது. இதனால் 15 ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி தீயில் எரிந்து நாசமானது. தொடர்ந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்டது சிங்காரா வனச்சரகம். இந்த வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லட்டி மலை பகுதியில் நேற்று மாலை 4.30 மணிக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக தெரிகிறது. கடும் வறட்சியால் தீ மளமளவென வனப்பகுதியில் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த சிங்காரா வனச்சரகர் காந்தன், வனவர்கள் பீட்டர்பாபு, சித்தராஜ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 2 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம் அடைந்தது. வனத்துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

பைக்காரா, சிங்காரா வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் 17 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com