பாதாள சாக்கடை திட்டப்பணி புகார்கள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை, அமைச்சர் பாஸ்கரன் தகவல்

காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணி புகார்கள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பாஸ்கரன் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
பாதாள சாக்கடை திட்டப்பணி புகார்கள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை, அமைச்சர் பாஸ்கரன் தகவல்
Published on

காரைக்குடி,

காரைக்குடி நகர அ.தி.மு.க. சார்பில் ஐந்து விளக்கு பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகங்கை பாராளு மன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் ராஜன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் மெய்யப்பன் வரவேற்றார்.

கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவுகளையும், அவர் மக்களுக்காக அறிவித்த திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றி வரும் அரசாக நமது அரசு செயல்பட்டு தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

நானும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சாதாரண ஏழை விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். எங்களுக்கு ஏழைகளின் கஷ்டம் என்றவென்று தெரியும். அதை உணர்ந்தே மக்களுக்கான திட்டங்களை தீட்டி தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மூலம் வளர்ச்சி கண்டவர்கள் அவரது ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு துரோகம் செய்ய முயற்சி செய்வது கண்டிக்கதக்கது. அந்த செயல் மன்னிக்கமுடியாத குற்றத்திற்கு சமமானது. இந்நிலை தொடர்ந்தால் தொண்டர்களின் ஆதரவோடு அவர்களின் சூழ்ச்சியை முறியடிப்போம்.

அ.தி.மு.க. கட்சியில் வாரிசுகளுக்கு வழியில்லை. உறவுகளுக்கு உரிமையில்லை. இது ஏழைகளின் நலன் காக்கும் அரசாக மட்டுமே செயல்படும். சிறுபிள்ளைத் தனமாக சிலர் கட்சி தொடங்குவதை குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை. சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், காரைக்குடி பகுதியின் முன்னேற்றத்திற்காகவும் நானும், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி.யும் இப்பகுதியில் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். விரைவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை காரைக்குடிக்கு அழைத்து வந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

காரைக்குடி நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டு விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் கற்பகம் இளங்கோ, மாவட்ட அவைத்தலைவர் காளிதாசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.அசோகன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கோவிந்தன், நகர இளைஞரணி செயலாளர் இயல்தாகூர், புலவர் பழனியப்பன், எம்.ஜி.ஆர். மன்ற பொறுப்பாளர் தேவன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் ராமாமிர்தம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சின்னத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com