‘நிவர்’ புயலால் ஏற்பட்ட சேதத்தை விரைந்து கணக்கிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் - வேலூரில் துரைமுருகன் பேட்டி

‘நிவர்’ புயலால் ஏற்பட்ட சேதத்தை விரைந்து கணக்கிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று வேலூரில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
‘நிவர்’ புயலால் ஏற்பட்ட சேதத்தை விரைந்து கணக்கிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் - வேலூரில் துரைமுருகன் பேட்டி
Published on

வேலூர்,

வேலூரில் கனமழையையொட்டி திடீர்நகர், முள்ளிபாளையம் பகுதிகளை சேர்ந்த சுமார் 450 பேர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. நேற்று சந்தித்து ஆறுதல் கூறி, உணவு, போர்வை போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து அவர்கள் மாங்காய் மண்டி பகுதியில் மழைநீர் செல்லும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

முன்னதாக துரைமுருகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

நிவர் புயல் ஏராளமான மரங்களை சாய்த்துள்ளது. பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. அரசு விரைவாக நஷ்டத்தை கணக்கிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். காரணம், சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த அமித்ஷா தமிழகத்துக்கு கொட்டி கொடுப்பது போல் பேசிவிட்டு சென்றார்.

இந்த புயல் சேதத்துக்கு எவ்வளது கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட திடீர்நகர் பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தண்ணீர் தேங்கி உள்ளது.

மோர்தானா நீர் செல்லும் இரு கால்வாயை தூர்வாராததால் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. அதை சரி செய்ய வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த புயலுக்கும் வெளியே செல்லாதவர். ஆனால் தற்போது தேர்தல் காரணமாக அவர் கடலூர் சென்றுள்ளார். மழை வந்தால் மட்டுமே ஆக்கிரமிப்பை அகற்ற இந்த அரசுக்கு ஞானம் வருகிறது. அமைச்சர்கள் அனைவருமே பொய் பேசி வருகிறார்கள். பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு முதலில் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com