வெறிநாய் கடித்து சிறுவன் உள்பட 7 பேர் படுகாயம்

கறம்பக்குடியில் வெறிநாய் கடித்து சிறுவன் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வெறிநாய் கடித்து சிறுவன் உள்பட 7 பேர் படுகாயம்
Published on

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் சமீபகாலமாக நாய்களின் பெருக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கறம்பக்குடி கடைவீதியில் விற்கப்படும் கோழி, ஆட்டுக்கறி, மீன் உள்ளிட்ட மாமிசங்களின் கழிவுகளை வியாபாரிகள் வெட்ட வெளியில் கொட்டி வருவதால் நாய்கள் கறம்பக்குடி பகுதிக்கு படையெடுத்து வர தொடங்கி உள்ளன.

கட்டுப்பாட்டின்றி திரியும் இந்த நாய்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது வெயில் காலம் என்பதால் சில நாய்களுக்கு வெறிபிடித்து அங்கும் இங்கும் சுற்றித் திரிகின்றன. நேற்று முன்தினம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த சுப்பையா (வயது 60), வெள்ளையம்மாள் (45), ரோகிணி (23) ஆகிய 3 பேரையும் வெறிநாய் ஒன்று கடித்தது.

இதேபோல நேற்று தென்னகர், அக்ஹரகாரம், நரங்கிப்பட்டு பகுதிகளை சேர்ந்த இளந்தமிழ் (7), பார்த்திபன் (27). சந்திரன் (42), காத்தாயி (65) ஆகிய 4 பேரையும் வெறிநாய்கள் கடித்து குதறின. இதில் சிறுவன் உள்பட 7 பேரும் படுகாயமடைந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

கறம்பக்குடி பகுதிகளில் தொடர்ந்து கூட்டம், கூட்டமாக வரும் நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் பொதுமக்களுக்கு சங்கடத்தை விளைவிக்கும் நாய்களை உடனடியாக பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com