சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ராகுல்காந்தி சாமி தரிசனம்

2 நாள் சுற்றுப்பயணமாக மைசூருவுக்கு வந்துள்ள ராகுல் காந்தி, சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ராகுல்காந்தி சாமி தரிசனம்
Published on

மைசூரு,

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கர்நாடகத்துக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மைசூருவுக்கு வந்தார்.

ராகுல்காந்தி நேற்று காலை 9.15 மணி அளவில் தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து ராகுல்காந்தி, மண்டஹள்ளி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ராகுல்காந்தி, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அவருடன் முதல்-மந்திரி சித்தராமையா, பரமேஸ்வர், செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரும் சென்றனர்.

ராகுல்காந்தி வருகையையொட்டி சாமுண்டி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாமுண்டி மலைக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மேலும், பொது தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. வாகனங்கள் அனைத்தும் லலிதா மகால் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை ராகுல்காந்தி 4 முறை கர்நாடகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com