ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி செய்த அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி
Published on

சேத்துப்பட்டு,

பெரணமல்லூரை அடுத்த ரகுநாதபுரத்தை சேர்ந்தவர் ராகவச்சாரி. இவர் ஆற்காடு, நெடுங்குணம், மழையூர் ஆகிய பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் அர்ச்சகராக இருந்து வந்தார். நெடுங்குணம் கிராமத்தில் தங்கி இருந்தார்.

பெரணமல்லூர், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த சிலரிடம் இவர் எனக்கு திருச்சியில் ரெயில்வே துறையில் பொறியாளர் ஒருவர் நண்பராக உள்ளார். அவர் மூலம் ரெயில்வேயில் வேலைவாங்கித்தர என்னால் முடியும் என்றும் அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதனை உண்மையென நம்பி பலர் அவரை அணுகியுள்ளனர். இவ்வாறு அவர் 35 பேருக்கு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பணம் வாங்கியவர்களிடம் ஒரு மாதத்தில் வேலை கிடைத்து விடும் என்று கூறினார்.

சுமார் 6 மாதம் ஆகியும் யாருக்கும்வேலை கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ராகவச்சாரியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு, ராகவச்சாரி தலைமறைவு ஆகியிருப்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை குற்றப்பிரிவு போலீசிலும், சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தனர். இந்த நிலையில் கோழிப்புலியூர் கூட்டுரோடு பகுதியில் இருந்த ராகவச்சாரியை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து சேத்துப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் திருவண்ணாமலை குற்றப்பிரிவு போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com