ரெயில்வே கேட் பழுதால் தாமதம்: விபத்தில் சிக்கிய அரசு பஸ் கண்டக்டர் பரிதாப சாவு

ரெயில்வே கேட் பழுதால் விபத்தில் காயம் அடைந்த அரசு பஸ் கண்டக்டரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரெயில்வே கேட் பழுதால் தாமதம்: விபத்தில் சிக்கிய அரசு பஸ் கண்டக்டர் பரிதாப சாவு
Published on

குளித்தலை,

கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே உள்ள சிந்தலவாடி பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 34). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலை- தாளியாம்பட்டி செல்லும் சாலையில் மேட்டுப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், குளித்தலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து பிரபுவை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருந்தது.

இந்த நிலையில் ரெயில் வருவதையொட்டி குளித்தலை- மணப்பாறை சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டது. பின்னர் ரெயில்வே கேட்டை திறக்க முயன்றபோது அதனை திறக்க பயன்படும் இரும்பு கம்பி உடைந்தது. இதன் காரணமாக கேட்டை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது 108 ஆம்புலன்ஸ் அந்த வழியாக வந்தபோது கேட்டை திறக்க முடியாது என தெரிந்ததும், ஆம்புலன்சை அங்கிருந்து திருப்பி கண்டியூர் வழியாக குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது கண்டியூர் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் அந்த வழியாகவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திம்மாச்சிபுரம் வழியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரபு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர் பரிந்துரை செய்தார். அதன்பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரபுவை அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்சில் ஏற்றிய போது பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ ஊழியர்கள் கூறுகையில், ரெயில்வே கேட் பழுதால் பிரபுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 20 நிமிடம் தாமதமானதால் அவர் உயிரிழந்து விட்டதாகவும், குறித்த நேரத்திற்குள் கொண்டு சென்றிருந்தால் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பழுதடைந்த ரெயில்வே கேட் 2 மணி நேரத்திற்கு பிறகு சரிசெய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ரெயில்வே கேட்டின் இருபுறமும் அணிவகுத்து நின்ற வாகனங்கள் அங்கிருந்து ஒன்றன், பின் ஒன்றாக சென்றன.

இதுபோல் பலமுறை இந்த ரெயில்வே கேட் பழுதடைந்த காரணத்தால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. பலமுறை மேம்பாலம் கட்ட வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட பழுதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பிரபுவுக்கு திருமணமாகி 1 ஆண்டுகளே ஆகிறது. அவரது மனைவி பிரபா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com