திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம்: ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி போராட்டம்

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம்: ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி போராட்டம்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி தலைமை தாங்கினார். இதில், அனைத்து குடியிருப்பு நலச்சங்கத்தினர் மற்றும் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மக்கள் கலந்து கொண்டனர். அப்போது, நிருபர்களிடம் பாலபாரதி கூறியதாவது:-

மேம்பாலம் வேலை தொடங்கி 4 ஆண்டுகள் ஆகியும் 50 சதவீத பணிகள் கூட முடியவில்லை. பழனி ரெயில்வே கேட்டும் மூடப்பட்டதால் பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது. அவசர ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியவில்லை. அங்குள்ள சுரங்கப்பாதையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீட்டு தொகையும் கிடைக்கவில்லை.

தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் எல்லா கூட்டங்களிலும் முன்னுக்கு பின் முரணாக பேசி வருவது மக்கள் அறிந்த உண்மை. இந்த மேம்பாலம் அமைக்க கால தாமதம் ஆவதற்கும் அமைச்சர் தான் காரணம். கமிஷனை எதிர்பார்த்து இழப்பீட்டு தொகையை தரவிடாமல் காலம் தாழ்த்துகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, ஆர்.டி.ஓ. ஜீவா ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க முழு முயற்சி எடுத்து வருகிறோம். நிலம் வழங்கியவர்களுக்கு ரூ.30 கோடி இழப்பீட்டு தொகை கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். பணிகள் நடந்து வருகிறது. எனவே போராட்டத்தை கைவிடுமாறு கூறினார். ஆனால், உடன்படாத பாலபாரதி தலைமையிலான போராட்டக்காரர்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com