திருச்செங்கோட்டில் இடி, மின்னலுடன் கனமழை-சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது

திருச்செங்கோட்டில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
திருச்செங்கோட்டில் இடி, மின்னலுடன் கனமழை-சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது
Published on

எலச்சிப்பாளையம்:

கனமழை

திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் அவதிப்பட்டு வந்தனர். இதனிடையே வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. மிதமாக ஆரம்பித்த இந்த மழை நேரம் செல்ல செல்ல இடி, மின்னலுடன் கனமழையாக மாறியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது.

சாலைகளில் ஆறாக ஓடியது

சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் திருச்செங்கோட்டில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. சேலம், சங்ககிரி சாலைகள் மற்றும் திருச்செங்கோடு நகர பஸ் நிலையம், உழவர் சந்தை அருகே உள்ள பிரதான சாலைகளில் கழிவு நீருடன் கலந்து மழை நீர் ஆறாக ஓடியது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற பொதுமக்கள் சிரமமடைந்தனர்.

சாலைகளை மூழ்கடித்தப்படி ஓடிய தண்ணீரால் சில மோட்டார் சைக்கிள்கள் பழுதாகி நடு வழியில் நின்றன. கார் மற்றும் கனரக வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து சென்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்

திருச்செங்கோட்டில் சாக்கடை கால்வாய்களை முறையாக தூர்வாரவில்லை. இதனால் மழை காலங்களில் கழிவு நீர், மழை நீருடன் கலந்து வெளியேறுகிறது. இது சாலைகள், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி சாலை பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மழை பெய்தபோது மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டிட மேஸ்திரி முருகேசன் என்பவர் வாகனத்துடன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். பின்னர் அவர் அம்மன்குளம் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். எனவே இதுபோன்ற மற்றொரு சம்பவம் நடப்பதற்கு முன் சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com