

திருச்சி,
இந்நிலையில் நேற்று காலையில் இருந்தே வெயில் கொளுத்தியது. மாலை 3 மணி அளவில் திருச்சி நகரில் பல இடங்களிலும் திடீர் என மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிட நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால் ஜங்ஷன், பாலக்கரை, உறையூர் உள்பட பல இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மதுரை ரோடு ஜெயில் தெருவில் வடிகால் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் செல்வதற்கு வழி இன்றி சாக்கடை நீருடன் கலந்து தெருவில் வெள்ளம்போல் தேங்கியது. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவதி அடைந்தனர். இரு சக்கர வாகனங்களிலும் அந்த தெருவில் செல்ல முடியவில்லை. இந்த பகுதியில் உள்ள சாக்கடை வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் செய்து இருந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் ஐந்தாவது மெயின்ரோட்டை சேர்ந்த ரெங்கசாமி பிள்ளை என்பவரின் மனைவி மீனாம்பாள் (வயது87). இவருக்கு 4 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மணிமாறன் மட்டும் மீனாம்பாளுடன் தங்கி இருந்தார். நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது மீனாம்பாள் தனது வீட்டின் கழிவறைக்கு சென்றார். அப்போது மழை நீரில் நனைந்து போய் இருந்த கழிவறை சுவர் அவர் மீது இடிந்து விழுந்தது. இதில் மீனாம்பாள் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் காந்திமார்க்கெட் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் அங்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளை அப்புறப்படுத்தி மீனாம்பாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாக்கடை கால்வாயை ஒட்டி இருந்ததால் மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பலவீனமாக இருந்த சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. காந்திமார்க்கெட் போலீசார் இதுபற்றி ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.