கல்வராயன்மலையில் கன மழை: சேராப்பட்டு-சங்கராபுரம் சாலையில் 4 இடங்களில் மண் சரிவு; 50 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

கல்வராயன்மலையில் பெய்த கனமழையால் சேராப்பட்டு-சங்கராபுரம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 50 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கல்வராயன்மலையில் கன மழை: சேராப்பட்டு-சங்கராபுரம் சாலையில் 4 இடங்களில் மண் சரிவு; 50 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
Published on

கச்சிராயப்பாளையம்,

விழுப்புரம் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. இந்த மலையில் 171 கிராமங்கள் உள்ளன. இந்த மலையின் ஒரு பகுதியில் வசித்து வரும் வெள்ளிமேடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கச்சிராயப்பாளையம் வழியாக கள்ளக்குறிச்சிக்கு சென்று வருகின்றனர். இதேபோல் மற்றொரு பகுதியில் உள்ள சேராப்பட்டு, மூலக்காடு, கிளாக்காடு உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சங்கராபுரத்துக்கு சென்று வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கிய நாளில் இருந்து கல்வராயன்மலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 42.50 அடியாக இருந்தது. நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்ததும், பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்வராயன்மலை பகுதியில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இடைவெளி விடாமல் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

கனமழையால் நள்ளிரவு 12 மணிக்கு கல்வராயன்மலையில் 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அதாவது சேராப்பட்டு-சங்கராபுரம் சாலையில் 4 இடங்களில் பெரிய, பெரிய கற்கள், பாறைகள் விழுந்தன. இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் முருங்கைமரத்து வளைவு என்ற இடத்தில் சாலையோரத்தில் கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், முருங்கைமரத்து வளைவில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்தனர். அதில், மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், இந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் சங்கராபுரத்தில் இருந்து மலை கிராமத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.

போக்குவரத்து தடை ஏற்பட்டதால் சேராப்பட்டு, கிளாக்காடு, மூலக்காடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக சங்கராபுரம் செல்ல முடியாமல் பெரும் அவதி அடைந்தனர்.

நேற்று காலை 6 மணிக்கு நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சாய்ராம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, 4 இடங்களில் சரிந்து கிடந்த மண் மற்றும் சிறிய கற்கள் அகற்றப்பட்டது. ஆனால் பெரிய பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற முடியவில்லை. எனவே தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பாறைகள் உளி மூலம் உடைத்து அகற்றப்பட்டது. அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு போக்குவரத்து தொடங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com