ரூ.2 ஆயிரம் கோடி செலவில்: அடையாறு, கூவம் பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் அமைப்பு - மாநகராட்சி கமிஷனர் தகவல்

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் அடையாறு, கூவம் பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
ரூ.2 ஆயிரம் கோடி செலவில்: அடையாறு, கூவம் பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் அமைப்பு - மாநகராட்சி கமிஷனர் தகவல்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டதில் பருவமழைக்கு முன்பாக மழைநீர் தேங்காத வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகளிடம், கமிஷனர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தினார். மேலும் அந்த பணிகளை 20-நாட்களில் முடித்திடவும் அவர் உத்தரவிட்டார். இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தோம். கடந்த, 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில், அடையாறு, கூவம் பகுதிகளில், புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்வாய்களில் இருந்த சிறிய பழுதுகள், ரூ.350 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான இடங்களில், நீர் தேங்குவது நிரந்தரமாக தடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில், 2015-ம் ஆண்டுக்கு முன், 1,100 இடங்கள் மழைநீர் தேங்கும் இடங்களாக இருந்தன. தற்போது, ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு கட்டமைப்பு காரணமாக, 105 இடங்களில் நீர் தேங்கும் வகையில் உள்ளன. இதில், மோட்டார் வாயிலாக தான் நீர் எடுக்க முடியும். சுரங்கப்பாதையில், 2 மோட்டார் பதிலாக, 3 மோட்டார் அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், மாதவரம் மண்டலத்தில் இருந்து, சி.பி.சி.எல்., நிறுவனத்தின், நிலத்தின் வழியாக கொற்றலை ஆற்றுக்கு மழைநீர் செல்கிறது. எனவே, நீர் செல்வதற்காக, சி.பி.சி.எல்., நிறுவனத்தின் ஒருபகுதி சுற்றுச்சுவரை அகற்ற கோரியுள்ளோம். சென்னையில், மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் உள்ள அமலை செடிகள் அகற்றப்படும்.

மாநகராட்சியில், 45 ஆயிரம் உறைகிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பருவமழைக்கு முன், 15 ஆயிரம் உறைகிணறுகள் அமைக்கப்படும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை, 3 மாதங்களில் ஏற்படுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்வாயில், கழிவுநீர் கலப்பது குறித்து, சென்னை நதிகள் அறக்கட்டளை சார்பில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, குடிநீர் வாரியம் வாயிலாக, ரூ.2 ஆயிரத்து 600 கோடி செலவில் பணிகள் நடைபெறும். இந்த பணிகள் முடிந்த பின், மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும்.

மரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற 15 நாட்கள் கெடு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில், 210 நீர்நிலைகளில், 100 நீர்நிலைகளில் சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள நீர்நிலைகளில், தூர்வாருவது உள்ளிட்ட அடிப்படை பணிகள் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com