ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் சொத்து வரியை உயர்த்த வேண்டும்

ஊட்டியில் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் சொத்து வரியை உயர்த்த வேண்டும்
Published on

ஊட்டி

ஊட்டியில் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

சிறப்பு கூட்டம்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் சொத்து வரியை உயர்த்தி சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க, நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் சிறப்பு கூட்டம் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையாளர் காந்திராஜ் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:-

ஊட்டி நகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் மீது சீல் வைப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் விதிமுறைகளை மீறிய பெரிய வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நோட்டீஸ் மட்டும் வினியோகிக்கப்படுகிறது. அதே சமயத்தில் நடுத்தர மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு கூட விதிமுறையை மீறினால் உடனடியாக சீல் வைக்கப்படுகிறது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் நிலையில், அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டி நகராட்சியில் பொதுமக்களிடையே, கவுன்சிலர்களின் உறவினர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு விடுவதில் பிரச்சினை இருப்பதால் ரூ.10 லட்சம் வரை வாடகை இழப்பு ஏற்பட்டு உள்ளது.

தேவைக்கு ஏற்ப சுகாதார பணியாளர்கள் இல்லாததால் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். மேலும் தற்காலிகமாக கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். கட்டிடம் கட்ட அனுமதி தருவதில் தாமதம் ஏற்படுவதால் பல ஆண்டுகளாக பொதுமக்கள் காத்துக்கிடக்க வேண்டி உள்ளது. காந்தல் பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

வார்டு மறுவரையறை

நீலகிரி மாவட்டத்தில் பயர் கேம்ப் நடத்த அனுமதி இல்லாத நிலையில், காந்தல் அருகே விதிமுறைகளை மீறி நடத்தப்படுகிறது. மாரியம்மன் கோவில் பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தினமுமு 8 மணி நேரம் மட்டுமே பணியாற்றும் வகையில் துப்புரவு பணியாளர்களின் வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும் சுகாதார பணியாளர்களுக்கு முறையான உபகரணங்கள் வழங்க வேண்டும். வார்டு மறுவரையறையை சரியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த பிரச்சினைகளில் சிலவற்றுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ளவற்றுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வை கொண்டு வர வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். பின்னர் கவுன்சிலர்களிடம் ஒப்புதல் பெற்று, சொத்து வரி உயர்வு தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com