ரெயில்வே ஊழியர்களுக்கான போனஸ் தொகையை உயர்த்த வேண்டும்; தொழிற்சங்கம் வலியுறுத்தல்

ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் அடிப்படையில் தொழிலாளர் சட்ட விதிகளின் படி போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ரெயில்வே ஊழியர்களுக்கான போனஸ் தொகையை உயர்த்த வேண்டும்; தொழிற்சங்கம் வலியுறுத்தல்
Published on

மதுரை,

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரெயில்வே உள்ளது. இதில், 14 லட்சத்துக்கும் அதிகமானோர் ஊழியர்களாக வேலைபார்த்து வருகின்றனர். இந்த நிறுவனம் உற்பத்தி பிரிவில் உள்ளதால் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் உள்ள விதிகள் பின்பற்றப்படுகின்றன. ரெயில்வே துறை ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு லாபம் ஈட்டி வருகிறது. எனவே, லாபத்தின் அளவுக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்ற விதியின்படி, ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ரெயில்வே அமைச்சகம் தொழிலாளர் விதிகளுக்கு முரணாக ஒவ்வொரு வருடமும் போனஸ் வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்க மதுரை கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரெயில்வே துறை ஒவ்வொரு முறை லாபம் ஈட்டும்போதும் அதற்கான போனஸ் தொகையை தொழிலாளர்களுக்கு வழங்குவதில்லை. குறிப்பாக கடந்த 6 வருடங்களாக 78 நாள் போனஸ் என்று வழங்கி வருகின்றனர்.

இதில் அதிகபட்சமாக ரூ.17,951 மட்டுமே 78 நாள் போனசாக கிடைக்கும். ஆனால், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் மூலம் மட்டுமே ரெயில்வே நிர்வாகம் கணிசமான தொகையை லாபமாக சம்பாதித்து வருகிறது. கடந்த 2015-16 நிதியாண்டில் 1,101 மில்லியன் டன் சரக்குகள், 8,438 மில்லியன் பயணிகளும், 2016-17-ம் நிதியாண்டில் 1,106 மில்லியன் டன் சரக்குகளும், 8,116 மில்லியன் பயணிகளும், 2017-18 நிதியாண்டில் 1,159 மில்லியன் டன் சரக்குகளும், 8,287 மில்லியன் பயணிகளும், 2018-19 நிதியாண்டில் 1,221 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. 8,438 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர்.

இதன்மூலம் ரெயில்வே தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் 2016-17-ம் நிதியாண்டில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 839 புள்ளிகளும், 2017-18 நிதியாண்டில் 6 லட்சத்து 11 ஆயிரத்து 386 புள்ளிகளுமாக உயர்ந்துள்ளது. அதேபோல, அடிப்படை சம்பளமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

இதனால், அடிப்படை சம்பளத்தைவிட குறைவான தொகையை ரெயில்வே ஊழியர்கள் போனசாக பெற்று வருகின்றனர். எனவே, தொழிலாளர் சட்ட விதிகளின்படி, உற்பத்தி மற்றும் லாபத்திற்கு ஏற்ப ரெயில்வே தொழிலாளர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com