ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு ஒருவரையாவது அனுமதியுங்கள் என உறவினர்கள் கோரிக்கை

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவரையாவது அனுமதியுங்கள் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு ஒருவரையாவது அனுமதியுங்கள் என உறவினர்கள் கோரிக்கை
Published on

சென்னை,

கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட ஏராளமானோர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக தினசரி வந்து செல்கின்றனர். இங்கு 1,618 படுக்கை வசதிகளுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் படுக்கை கிடைக்காமல் பலர், ஆஸ்பத்திரி வளாகத்திலும், ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் நோயாளிகளுடன் தவம் கிடக்கின்றனர்.

இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளை பார்த்துக்கொள்வதற்கும், அவர்களுக்கு உணவு கொண்டு செல்வதற்கும், ஒரு நோயாளிக்கு ஒரு பார்வையாளர் என அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனுமதி அட்டை வழங்கப்பட்டவர்கள் மட்டும் எப்போது வேண்டுமானாலும், நோயாளிகளை பார்த்து கொள்ள அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில், நேற்று காலை திடீரென, நோயாளிகளுடன் இருக்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அனைவரும் வார்டுக்கு வெளியே செல்லுமாறு, அங்கிருக்கும் காவலாளிகள் பார்வையாளர்களை விரட்டினர். இதனால் நோயாளிகளின் உறவினர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சற்று நேரத்தில் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.

தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள், உள்ளே சிகிச்சையில் இருப்பதாகவும், அவர்களுக்கு உணவு எடுத்து கொண்டு செல்வதாகவும், உள்ளே அனுமதிக்குமாறும் நோயாளிகளின் உறவினர்கள் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கண்ணீருடன், எனது தாய், தந்தை உள்ளே தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையன மருந்தை வாங்கி செல்கிறேன், உள்ளே அனுமதியுங்கள் என்று ஆஸ்பத்திரி வாயிலில் மன்றாடி நின்றனர்.

இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அனைவரையும் இங்கிருந்து கலைந்து செல்லுமாறும், நோயாளிகளுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பார்வையாளரை உள்ளே அனுமதிப்போம் என்றும் தடுப்புகளை வைத்து, டவர் பிளாக்-3 கட்டிடத்தை அடைத்தனர்.

மேலும், நோயாளிகளுக்கு உணவு கொடுக்க வந்தவர்களுக்கு மட்டும், போலீசார் உணவு கொடுக்க வசதி ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதுகுறித்து அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் கூறியதாவது:-

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எங்களது உறவினர்களை கவனித்துகொள்வதற்காக, எங்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது யாருக்கும் இனி உள்ளே செல்ல அனுமதி இல்லை என கூறுகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நிலை திடீரென மோசமடைந்தால், அருகிலே இருந்து அவர்களை யார் கவனித்து கொள்வார்கள்?.

நாங்கள் அருகில் இருந்தால், ஏதேனும் உதவியாக இருக்கும். நோயாளியுடன் உள்ளே இருந்து கவனித்து கொள்ளும் வகையில், புகைப்படத்துடன் கூடிய, அனுமதி அட்டை ஒருவருக்கு மட்டும் கொடுத்தாலே போதும். அந்த ஒருவர் மட்டுமே உள்ளே நோயாளியை கவனித்துக்கொள்வார். எனவே ஒருவருக்கு மட்டுமாவது ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் கூறுகையில், 1,650 நோயாளிகளுக்கு, ஒருவர் வீதம் 1,650 பார்வையாளர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பார்வையாளர்கள் அதே அனுமதி அட்டையில் 3 அல்லது 4 பேர் கொரோனா வார்டுக்குள் வந்துவிடுகின்றனர். அனைவரும், நோயாளிகளுடனே உட்கார்ந்து, நோயாளிகளுடனே சேர்ந்து சாப்பிடுகின்றனர்.

மேலும், இவர்கள் கொரோனா வார்டுக்குள் வந்து வெளியே சென்று சமுதாயத்தில் தொற்றை பரவ விடுகின்றனர். அதனால் யாருக்குமே உள்ளே அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் உடல் நிலை மோசமடைந்த நோயாளிகளின் உறவினர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி வழங்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com