விவசாயிகள், மீனவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்க ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும்

விவசாயிகள், மீனவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்க ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
விவசாயிகள், மீனவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்க ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயிலடியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றதை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது விலைவாசி உயர்வை குறைப்போம். மக்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுப்போம். 90 நாட்களுக்குள் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்போம் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பா.ஜ.க. வெற்றி பெற்றது. பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பு ஏற்றார்.

கடந்த 4 ஆண்டுகளில் என்ன சாதித்துவிட்டார்கள் என்று பார்த்தால் வாக்குகளை பெறுவதற்காக தான் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர். மக்களுக்கு நல்லது செய்யவில்லை. 8 கோடி பேருக்கு வேலை கொடுத்துவிட்டார்களா?. 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று நரேந்திரமோடி அறிவித்தார். கருப்பு பணம் பதுக்கி வைத்து இருக்கிறார்கள். கள்ளநோட்டு பெருகிவிட்டது. தீவிரவாதிகள் கையில் பணம் இருக்கிறது என்று காரணம் சொன்னார்.

இதனால் சிறுதொழில்கள் தான் பாதிக்கப்பட்டது. தற்போது ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியதால் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்தியாவில் எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் இல்லை. எதிர்க்கட்சி தலைவர்களை திட்டமிட்டு சிறைக்கு அனுப்பும் வேலையை தான் சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மூலம் நரேந்திரமோடி செய்கிறார்.

பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகள், மீனவர்கள், மகளிருக்கு பாதுகாப்பு இல்லை. பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்பினால் தான் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் வேலைவாய்ப்பு பெருகும். விவசாயிகள், மீனவர்கள், மகளிருக்கு பாதுகாப்பு கிடைக்கும். இதனால் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com