

திருக்காட்டுப்பள்ளி,
திருவையாறு தொகுதி அ.தி.மு.க. சார்பில் திருக்காட்டுப்பள்ளியில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான ரெத்தினசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாதாடி, போராடி, உண்ணாவிரதம் இருந்து சட்டப்போராட்டம் நடத்தி அரசிதழில் வெளியிட செய்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடத்தி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க தீர்ப்பை பெற்று தந்தார்கள்.
மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருக்கும் நிலையில், சட்டசபையில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். வெளிநடப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். காவிரி டெல்டா மாவட்டம் மட்டும் அல்லாமல் 18 மாவட்டங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது மேட்டூர் அணை.
மேட்டூர் அணையின் தண்ணீர் இருப்பு நிலைக்கு ஏற்ப காவிரி டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். கூடிய விரைவில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அரசு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கு ரூ.115 கோடி அறிவித்துள்ளது. மேலும் தமிழக விவசாயிகளுக்கு ரூ.3,340 கோடி பயிர்க்காப்பீடு திட்ட இழப்பீடு வாங்கி கொடுத்துள்ளோம். வறட்சி நிவாரணம் ரூ.2,247 கோடி விவசாயிகளுக்கு வழங்கி சாதனை படைத்துள்ளது இந்த அரசு.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்ய நினைத்த அனைத்தையும் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் செயல்படுத்தி வருகிறார்கள். ராமர்-லட்சுமணர் போல் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தை ஆண்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர்கள் சிவசண்முகம், நாகராஜன், அன்புமுருகன், தனசேகரன், திருவையாறு ஒன்றிய கழக செயலாளர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருக்காட்டுப்பள்ளி நகர செயலாளர் எம்.பி.எஸ். ராஜேந்திரன் வரவேற்றார். முடிவில் தஞ்சை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சாமிவேல் நன்றி கூறினார்.