ரம்ஜான் பண்டிகை: வீடுகளிலேயே தொழுகை நடத்திய முஸ்லிம்கள்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நீலகிரியில் முஸ்லிம்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.
ரம்ஜான் பண்டிகை: வீடுகளிலேயே தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
Published on

ஊட்டி,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கையாக கூட்டம் சேர்வதை தடுப்பதற்காக மசூதிகள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு இருந்து தினமும் சிறப்பு தொழுகை மேற்கொள்வார்கள். நோன்பு முடிந்த பின்னர் ரமலான் மாத இறுதியில் பிறை தென்பட்ட மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடினர்.

வீடுகளில் தொழுகை

வழக்கமாக பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறும். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வார்கள். ஊரடங்கால் பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை. அதற்கு பதிலாக முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொழுகை நடத்தினர். வீட்டு மாடியில் சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகையில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் செல்போன் அழைப்பு மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் உறவினர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com