ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தல்

ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் சித்தராமையா வலியுறுத்தினார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-
ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தல்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த விஷயத்தில் நம்மால் எந்த தவறும் நடைபெறாத வகையில் மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை சரியான முறையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை.

வெளிநாடுகளில் இருந்து 23 ஆயிரம் பேர் இங்கு வந்துள்ளனர். இவர்களில் 4,500 பேரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று அரசு சொல்கிறது. அவர்களை உடனே கண்டுபிடித்து மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். கர்நாடகம் இன்னும் 3-வது கட்டத்திற்குள் நுழையவில்லை என்று மந்திரி சொல்கிறார்.

பாதுகாப்பு கவச உடைகள்

நஞ்சன்கூடுவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்லவில்லை. யாருடனும் தொடர்பிலும் இருக்கவில்லை. அவ்வாறு இருந்தும் அவருக்கு அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு எப்படி அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறிய வேண்டும்.

அதே போல் துமகூருவில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். அவரும் வெளிநாடு செல்லவில்லை. அவருக்கு எப்படி அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையும் தீவிரமாக எடுத்து விசாரிக்க வேண்டும். கிராமங்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க வேண்டும். முக கவசங்கள், சானிடைசர் திரவம், முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள், பரிசோதனை கருவிகள் மாநில அரசிடம் போதுமான அளவில் இருப்பு இல்லை. ஏற்கனவே இருப்பதும் தரமானது இல்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

கடுமையான நடவடிக்கை

கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நிலை உள்ளது. அதனால் முககவசங்கள் தயாரிக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களிடம் இந்த பணியை ஒப்படைக்க வேண்டும். கர்நாடகம் 3-வது நிலையை அடைவதை தடுக்க மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியம். கர்நாடகத்தில் 6,020 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் ஒரு மருத்துவ அதிகாரியை நியமிக்க வேண்டும். கூட்டத்தில் இருந்து விலகி இருப்பது முக்கியம். அதே நேரத்தில் விவசாயிகளின் நலனை காக்க வேண்டியது அவசியம். விவசாய பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு விதைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு

பெங்களூருவில் வெளியூரை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். வெளிமாநிலங்களில் இருக்கும் கன்னடர்கள் இங்கு வரவ முடியாமலும், கர்நாடகத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவிக்கிறார்கள். வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள கன்னடர்களை அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும்.

அடுத்த 2 வாரம் மிக முக்கியமானது. அதனால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது என்பது நமது அனைவரின் பொறுப்பாகும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரும் பெரும் சவாலுக்கு மத்தியில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்பாவி மக்களை அடிப்பதை போலீசார் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com