வடகர்நாடக வளர்ச்சிப் பணிகள் குறித்து பகிரங்க விவாதத்துக்கு தயாரா? குமாரசாமி சவால்

தனிமாநிலம் கோரி வடகர்நாடகத்தில் 2-ந்தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடகர்நாடக வளர்ச்சிப் பணிகள் குறித்து பகிரங்க விவாதத்துக்கு தயாரா? குமாரசாமி சவால்
Published on

பெங்களூரு,

வடகர்நாடக வளர்ச்சிப் பணிகள் குறித்து பகிரங்க விவாதத்துக்கு போராட்ட அமைப்புகள் தயாரா? என முதல்-மந்திரி குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.

கர்நாடகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் வடகர்நாடகத்தில் உள்ள 13 மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், அந்த மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. மேலும் வடகர்நாடக மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், அந்த மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் போராட்ட குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கார்கில் வெற்றி தினத்தையொட்டி பெங்களூருவில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலையில் மரியாதை செலுத்தினார். பின்னர் முதல்-மந்திரி குமாரசாமியிடம், வடகர்நாடக மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்தும், தனிமாநிலம் கோரி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பது பற்றியும் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

வடகர்நாடக மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டு கூறுவது தவறானது. தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது யார்? என்பது தெரியவில்லை. அகண்ட கர்நாடகம் என்பது மட்டுமே உண்மை. வடகர்நாடகம், மத்திய கர்நாடகம் என்ற பாகுபாடு கிடையாது. அகண்ட கர்நாடகத்தை உருவாக்கத்தான் பெலகாவியில் சுவர்ண சவுதா அமைக்கப்பட்டதே தவிர, வடகர்நாடகம் என்று பிரிப்பதற்காக அல்ல. அகண்ட கர்நாடகத்தை உருவாக்குவது தான் என்னுடைய குறிக்கோள். அதுதான் மாநில மக்களின் விருப்பமும் ஆகும்.

பட்ஜெட்டில் வடகர்நாடக மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை. வடகர்நாடக மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. அந்த மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது தேவையற்றது. முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த போராட்ட அமைப்புகள் வடகர்நாடக மாவட்டங்களில் நடந்துள்ள வளர்ச்சி பணிகள் குறித்து பகிரங்க விவாதத்துக்கு தயாரா?. அந்த அமைப்புகளுடன் பேசுவதற்கு தயாராக உள்ளேன்.

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பா.ஜனதாவினர் பாதயாத்திரை மேற்கொண்டு இருப்பதை வரவேற்கிறேன். இதுபோன்ற போராட்டம், பாதயாத்திரை மேற்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக பா.ஜனதாவினர் பாதயாத்திரை மேற்கொள்வதையும் வரவேற்கிறேன். ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக விவசாய கடன் ரூ.48 ஆயிரம் கோடியை எனது தலைமையிலான அரசு தள்ளுபடி செய்து இருக்கிறது.

இதற்கு பா.ஜனதாவினர் ஆதரவு அளிக்காவிட்டாலும், அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது சரியல்ல. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் விவசாய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யாதது ஏன்?. அதுபற்றி பா.ஜனதாவினர் பேச தயாரா?.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com