பொங்கல் பண்டிகைக்கு கரும்புகள் தயார்

பொங்கல் பண்டிகைக்கான கரும்புகள் சிதம்பரம் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு கரும்புகள் தயார்
Published on

அண்ணாமலைநகர்,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15-ந்தேதி உலகெங்கும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகை என்றாலே பன்னீர் கரும்பு தான் முக்கியத்தவம் பெறும். பொங்கலிடும் போது மஞ்சளுடன், கரும்பு வைப்பது தமிழர்களின் மரபாக இருக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்புகளை வழங்குவதில் காவிரியின் கடைமடைப் பகுதியாக இருக்கும் சிதம்பரமும் முக்கியத்துவம் பெறுகிறது. சிதம்பரம் வல்லம்படுகை, அகரநல்லூர், பழையநல்லூர், பெராம்பட்டு, வேளக்குடி, கடவாச்சேரி, சாலியந்தோப்பு உள்பட பல்வேறு கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். பருவமழை நல்ல முறையில் பெய்ததால் கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்து, அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்த பகுதி கரும்புகளுக்கு எப்போதும் அதிக மவுசு உள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வயல்களுக்கு வந்து கரும்புகளை கொள்முதல் செய்து லாரியில் ஏற்றி செல்வது வழக்கம். தற்போது கரும்புகள் அறுவடைக்கு தயாராக இருப்பதால், வியாபாரிகள் இந்த பகுதியில் முகாமிட்டு கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து வாங்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், வியாபாரிகள் தற்போது விலைகொடுத்து வாங்கினாலும், ஜனவரி மாத தொடக்கத்தில் தான் அறுவடையை தொடங்குவார்கள். இருப்பினும் சில இடங்களில் மட்டும் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு வெளியூர்களுக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பும் பணியும் நடக்கிறது. இதில் 25 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 500 வரைக்கும் விலை போகிறது என்றார் அவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com