‘அம்பேத்கருக்காக மாநிலத்தை அடகு வைக்க தயார்' முதல்-மந்திரி பேச்சுக்கு சிவசேனா கண்டனம்

அம்பேத்கருக்காக மாநிலத்தை அடகு வைக்க தயார் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
‘அம்பேத்கருக்காக மாநிலத்தை அடகு வைக்க தயார்' முதல்-மந்திரி பேச்சுக்கு சிவசேனா கண்டனம்
Published on

மும்பை,

இந்திய குடியரசு கட்சியின் ஆண்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் தானேயில் நடந்தது. இந்த விழாவில் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு தான் சிலைகள் வைத்தனர். அவர்கள் அம்பேத்கருக்கு நினைவிடம் கட்டாமலும், அவருக்கு உரிய மரியாதை கொடுக்காமலும் அலட்சியமாக இருந்துவிட்டனர்.

ஆனால் நான் அம்பேத்கருக்கு செய்ய வேண்டிய பணிக்காக மராட்டியத்தை அடகு வைக்கவும் தயாராக உள்ளேன் என்றார்.

முதல்-மந்திரியின் இந்த கருத்திற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி தேர்தல் விளம்பரத்திற்காக செலவு செய்யும் பணத்தை நினைவிடம் கட்டப் பயன்படுத்தினால், மாநிலத்தை அடகு வைக்க வேண்டிய தேவை இல்லை. அம்பேத்கர் இன்று உயிரோடு இருந்திருந்தால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு மாநிலத்தை அடகு வைப்பேன் என்று பேசியவர்களுக்கு எதிராக லத்தியை எடுத்து இருப்பார்.

மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கும் போது அரசு அடுக்கடுக்காக திட்டங்களை அறிவிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

நிதி பற்றாக்குறையால் நினைவிடங்கள் கட்டும் பணி தடைப்படுவது நல்லதல்ல. அதே நேரத்தில் நினைவிடம் கட்ட மாநிலத்தை அடகு வைப்பேன் என பொதுவிழாவில் முதல்-மந்திரி பேசியது முறையல்ல. புல்லட் ரெயில், மும்பை - நாக்பூர் விரைவு சாலை திட்டத்திற்கு பணம் இருக்கிறது. ஆனால் அம்பேத்கருக்கு நினைவிடம் கட்ட மாநிலத்தை அடகு வைக்க வேண்டுமா?. நீங்கள் அடகு வைத்தால் மாநிலத்தை மீட்பது யார்?.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நடவடிக்கை மிகவும் தாமதமானது எனவும் அக்கட்சி விமர்சித்து உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் ஏற்கனவே நாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைத்துவிட்டது எனவும் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com