தவறை உணர்ந்து முன்வந்தால் சிவசேனாவுடன் ஆட்சியமைக்க தயார்; பா.ஜனதா சொல்கிறது

தவறை உணர்ந்து முன்வந்தால் சிவசேனாவுடன் ஆட்சியமைக்க பாரதீய ஜனதா தயார் என்று முன்னாள் மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறினார்.
தவறை உணர்ந்து முன்வந்தால் சிவசேனாவுடன் ஆட்சியமைக்க தயார்; பா.ஜனதா சொல்கிறது
Published on

மும்பை,

கொள்கையில் மாறுபட்ட கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்துவது எளிதல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் இடையே அவ்வப்போது கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆட்சி நடக்காவிட்டால் அரசில் இருந்து வெளியேற வேண்டும் என்று சோனியா காந்தி தங்களுக்கு நிபந்தனை விதித்து இருந்ததாக மந்திரி அசோக் சவான் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பாரதீய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான சுதீர் முங்கண்டிவார் நேற்று நாந்தெட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரும் நாட்களில் சிவசேனா எங்களிடம் வந்து, கூட்டணியில் இருந்து வெளியேறி தவறு செய்து விட்டோம், நாம் ஆட்சியமைக்கலாம் என்று கூறினால், பாரதீய ஜனதா அதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காது. சிவசேனாவின் கோரிக்கையை ஏற்று ஆட்சியமைக்க கைகோர்ப்போம். மோடியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எந்த கட்சியுடனும் ஆட்சியமைக்க பாரதீய ஜனதாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

சிவசேனா அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து இருப்பது, 21-ம் நூற்றாண்டின் அதிசயம். சிவசேனாவும், காங்கிரசும் வெவ்வேறு கொள்கை கொண்ட கட்சிகள். வேறுவேறு நிலைபாடுகளை எடுக்கும் கட்சிகள். எந்த விஷயத்திலும் அவர்களுக்குள் ஒத்துவராது.

பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க முஸ்லிம்கள் கேட்டுக்கொண்டதால் சிவசேனாவுடன் கைகோர்த்ததாக அசோக் சவானே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சுதீர் முங்கண்டிவார் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் மந்திரி அசோக் சவான் கூறுகையில், சுதீர் முங்கண்டிவார் கனவு காணும் பழக்கம் உள்ளவர். அதன்படி அவர் கனவில் உள்ளார். இன்னும் ஆட்சியில் இருப்பதாகவும் நினைத்து கொள்கிறார் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com