குளித்தலையில் ஆமை வேகத்தில் நடைபெறும் பழைய நீதிமன்ற கட்டிட புனரமைப்பு பணி

குளித்தலையில் ஆமை வேகத்தில் நடைபெறும் பழைய நீதிமன்ற கட்டிட புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலையில் ஆமை வேகத்தில் நடைபெறும் பழைய நீதிமன்ற கட்டிட புனரமைப்பு பணி
Published on

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலையில் கடந்த 2013-ம் ஆண்டு புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டது. அதன்பிறகு இந்த கட்டிடத்தில் 4 நீதிமன்றங்களும் செயல்பட தொடங்கின. இதனால் ஏற்கனவே குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சார்புநீதிமன்ற கட்டிடம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இந்த கட்டிடத்தில் மகிளா நீதிமன்றம் தொடங்க குளித்தலை வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இந்த கட்டிடம் பயன்படுத்தப்படாமலே இருந்தது. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால், இந்த கட்டிடத்தின் பழமை மாறாமல் இருப்பதற்காகவும், பழங்கால கட்டிடத்தை பாதுகாக்கும் விதமாக இக்கட்டிடத்தை புதுபிக்க தமிழக அரசு ரூ.30 லட்சம் நிதிஒதுக்கீடு செய்தது.

பழமை மாறாமல்

இதையடுத்து சார்பு நீதிமன்றமாக செயல்பட்டு வந்த இந்த கட்டிடத்தில் பழுதடைந்தும், சேதமான ஓடுகள், ஓடுகள் பொருத்த பயன்படுத்தப்பட்ட விட்டம் உள்பட மரத்தாலான பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களையும் பழமை மாறாமல் அக்காலத்தில் இருந்ததுபோலவே இருக்கும்வகையில் புனரமைக்கும் பணிகள் குளித்தலை பொதுப்பணித்துறை (கட்டிடம்) மூலம் கடந்த 2019-ல் தொடங்கப்பட்டது. இக்கட்டிடத்தின் புனரமைப்பு பணிகள் முற்றிலும் முடிவடைந்த பின்னர் இக்கட்டிடம் பழமையை பறைசாற்றும் விதமாக காட்சி பொருளாக மக்கள் பார்வைக்காக வைக்கப்படுமா அல்லது ஏதேனும் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுமா என்பது குறித்து பின்னரே தெரிவிக்கப்படுமென கூறப்பட்டு வந்தது.

புனரமைக்கும் பணி

இந்த கட்டிடத்தில் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைய உள்ளநிலையில், இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஓடுகள் அகற்றப்பட்ட நிலையிலேயே இக்கட்டிடம் உள்ளது. புனரமைக்கும் பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. ஆமைவேகத்தில் இந்த பணி நடைபெறுவதால் இக்கட்டிடத்தின் மேல்பகுதியில் பலஇடங்களில் செடிகள் வளரத்தொடங்கிவிட்டன. பழமைமாறாமல் இருப்பதற்காக புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட இக்கட்டிடத்தில் செடிகள் வளர்ந்தால் அவற்றின் வேர்கள் கட்டிடத்தின் உள்பகுதி வழியாக வளர்ந்து அதன் உறுதித்தன்மையே கேள்விக்குறியாகிவிடும். மேலும் புனரமைக்க ஒதுக்கப்பட்ட நிதியும் பயனற்று போய்விடும். எனவே இந்த கட்டிடத்தின் உறுதித்தன்மையை பாதுகாக்க இதில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி உடனடியாக புனரமைப்பு பணிகளை தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com