காவிரியை மீட்பதற்காக மைசூருவில் ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பேரணி

காவிரியை மீட்பதற்காக மைசூருவில் ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினார். இந்த பேரணியை இளவரசர் யதுவீர் தொடங்கி வைத்தார்.
காவிரியை மீட்பதற்காக மைசூருவில் ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பேரணி
Published on

மைசூரு,

நதிகளை மீட்போம் இயக்கத்தின் சார்பில் தென்இந்தியாவின் உயிர் நாடியாக விளங்கும் காவிரியை மீட்பதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கினார். இந்த இயக்கம் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரி வடிநில பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிக்க, காவிரியை மீட்பதற்காக ஜக்கி வாசுதேவ் காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டம் தலைக்காவிரியில் இருந்து திருவாரூர் வரை 1,200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு விவசாயிகளை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, குடகு மாவட்டம் தலைக்காவிரியில் இருந்து ஜக்கி வாசுதேவ், கடந்த 3-ந்தேதி தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினார். கொட்டும் மழையிலும் அவர் பயணத்தை தொடங்கினார். அவருடன் மோட்டார் சைக்கிள் குழுவினரும் புறப்பட்டனர்.

கடந்த 4-ந்தேதி மைசூரு மாவட்டம் உன்சூருக்கு வந்த ஜக்கி வாசுதேவ், அங்கு விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், நேற்று முன்தினம் மைசூருவுக்கு வந்த ஜக்கி வாசுதேவ், அங்கு காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி, தர்மஸ்தலா தர்ம அதிகாரி வீரேந்திர ஹெக்டே உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து ஜக்கி வாசுதேவ் மைசூரு அரண்மனைக்கு சென்று இளவரசர் யதுவீரை சந்தித்து பேசினார். அப்போது, உங்களுடைய முயற்சி வெற்றி பெற வேண்டுகிறேன் என்று யதுவீர் தெரிவித்தார். அதன்பின்னர் ஜக்கி வாசுதேவ் மற்றும் குழுவினர் மைசூரு அரண்மனை முன்பு இருந்து மீண்டும் மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கினார்கள். இந்த பேரணியை மைசூரு இளவரசர் யதுவீர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மோட்டார் சைக்கிள் பேரணி மைசூருவில் இருந்து மண்டியா நோக்கி சென்றது. மண்டியாவில் விவசாய சங்கத்தினரை ஜக்கி வாசுதேவ் சந்தித்து பேசினார். இந்த மோட்டார் சைக்கிள் பேரணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவை வந்தடைகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com