கால்வாயில் மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை, சமூக நலத்துறையிடம் ஒப்படைப்பு

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை நேற்று சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தையின் பராமரிப்பு செலவை அரசு ஏற்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
கால்வாயில் மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை, சமூக நலத்துறையிடம் ஒப்படைப்பு
Published on

சென்னை,

சென்னை வளசரவாக்கம், எஸ்.வி.எஸ்.நகரில் கடந்த மாதம் 15-ந் தேதி பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கழிவு நீர் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டது.

கிருமிகளால் நோய்த்தொற்று ஏற்பட்ட அந்த குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் உத்தரவின் பேரில் தாய்ப்பால் வங்கியில் இருந்து அந்த குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கப்பட்டு வந்தது.

ஒருமாத சிகிச்சைக்கு பின், அந்த பச்சிளம் குழந்தை சமூக நலத்துறையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அந்த குழந்தையை சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜாவிடம் ஒப்படைத்தார். அந்த குழந்தையை காப்பாற்றிய கீதாவின் ஆசைப்படி அந்த குழந்தைக்கு சுதந்திரம் என அமைச்சர்கள் பெயர் வைத்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த குழந்தை, சென்னை முகப்பேரில் உள்ள காருண்யா தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், குழந்தை சுதந்திரத்தின் பராமரிப்பு செலவிற்காக தமிழக அரசு சார்பில் ரூ.2,165 வழங்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ஜெயந்தி மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com