

கோவை,
கோவை மாவட்ட கலெக்டராக இருப்பவர் ராஜாமணி. இவர் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதற்காக அவர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், காய்கறி மார்க்கெட், சோதனை சாவடிகள் உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவும் பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு அவருக்கு திடீரென்று லேசான தொண்டை வலி மற்றும் காய்ச்சல் இருந்தது. இதனால் அவர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று தனது சளி மாதிரிகளை கொடுத்தார். அவை பரிசோதனை செய்யப்பட்டதில் கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த மாதம் 15-ந் தேதி உறுதியானது. இதனால் அவர் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் சிகிச்சை பெற்ற அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து அவர், டாக்டர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். கொரோனா தொற்றில் இருந்து முழுவதும் குணமடைந்ததால் கலெக்டர் ராஜாமணி நேற்று பணிக்கு திரும்பினார்.
கோவை கலெக்டர் அலுவலகம் வந்த அவரை, மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பூங்கொத்து வரவேற்றனர். பின்னர் அவர், தனது அறைக்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொண்டார். நேற்று திங்கட்கிழமை என்பதால் ஏராளமானோர் மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்களிடம் கலெக்டர் ராஜாமணி மனுக் களை பெற்றுக்கொண்டார்.