நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டை - சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ. வழங்கினார்

நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு, கூடுதல் சலுகை கிடைக்கும் சிவப்புநிற ரேஷன் அட்டைகளை சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ. வழங்கினார்.
நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டை - சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ. வழங்கினார்
Published on

காரைக்கால்,

புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோருக்கு மஞ்சள் நிற ரேஷன் அட்டையும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டையும் வழங்கியுள்ளது. இதில், சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்துள்ள மக்களுக்கு அரசின் மாதாந்திர இலவச அரிசி உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில், மஞ்சள், சிவப்பு என, 55 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் ரேஷன் அட்டை வைத்துள்ளனர். இதில், உண்மையிலேயே வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்காததால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதால், இதனை உடனே சரிசெய்யவேண்டும் என அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.

அதன்பேரில், காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல்துறை, தீவிர ஆய்வு செய்து, மஞ்சள் நிற ரேஷன் அட்டை பயனாளிகள் பலரை சிவப்புநிற ரேஷன் அட்டை பயனாளியாக மாற்றி அட்டை தயாரித்தது. இவை அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களால் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நெடுங்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 239 பயனாளிகளுக்கு சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ. புதிய சிவப்புநிற ரேஷன் அட்டைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறும்போது, நெடுங்காடு தொகுதியில் 500 பேருக்கு மேலாக மஞ்சள் ரேஷன் அட்டையை சிவப்பு ரேஷன் அட்டையாக மாற்றித்தர விண்ணப்பித்து உள்ளனர். முதல்கட்டமாக 239 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பலர் மஞ்சள் நிற அட்டை வைத்திருக்கின்றனர். விடுபட்ட 261 பயனாளிகளுடன், இவற்றையும் அரசின் சலுகைகள் கிடைக்கும் வகையில் சிவப்பு நிற அட்டையாக மாற்றித்தர வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். இந்த கோரிக்கையையும் அரசு விரைவாக நிறைவேற்றித்தர வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com