சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்துள்ளது - நாராயணசாமி பெருமிதம்

புதுவையில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்துள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்துள்ளது - நாராயணசாமி பெருமிதம்
Published on

புதுச்சேரி,

புதுவை அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க விழா உழவர்கரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வரவேற்று பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஒலிநாடாவை வெளியிட்டார். மேலும் அரசு டிரைவர்களுக்கான கண், காது மற்றும் பொது மருத்துவ முகாமினை தொடங்கிவைத்தார்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவையில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து துறையும், காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 200 பேர் உயிரிழந்தனர். 2018-ம் ஆண்டு அது 149 ஆக குறைந்தது. கடந்த ஆண்டு அதைவிட 40 சதவீதம் உயிரிழப்பு குறைந்துள்ளது. அதாவது 93 பேர் மட்டுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர். இது இன்னும் குறைய வேண்டும்.

புதுவையில் பெய்த மழையினால் சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. சாலைகளை செப்பனிட ரூ.100 கோடி ஒதுக்கி வேலைகள் நடந்து வருகிறது. அனைவரும் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

நாங்கள் தனியார் பஸ்களுக்கு எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை. தனியார் பஸ் டிரைவர்கள் வேகத்தடைகளை கூட கவனிக்காமல் பஸ்களை ஓட்டுகிறார்கள்.

புத்தாண்டு தினத்தன்று அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தினோம். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டதால் விபத்துகள் குறைந்தது.

2 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் நமது மாநில மக்கள் 95 சதவீதம் பேர் ஹெல்மெட் வாங்கி வைத்துக்கொண்டு அதை அணிவதில்லை.

இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டவேண்டும் என்று ஒரு அம்மா (கவர்னர் கிரண்பெடி) கூறுகிறார். காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது நாங்கள் தேர்தல்துறையிடம் அனுமதிபெற்று ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றோம். அதாவது தேர்தல் விதிமுறை என்னவென்றால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் முகத்தை மறைத்தபடி செல்லக்கூடாது என்பதுதான்.

உடனே கவர்னர் கிரண்பெடி நாங்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதை போலீஸ் டி.ஜி.பி.யிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க கூறினார். ஆனால் அதற்கு முன்பாக கவர்னர் கிரண்பெடியே ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் நகர்வலம் வந்தார். இதுதொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். ஆனால் நமது அதிகாரிகள் ஆளுக்கு தகுந்தாற்போல் ஒதுங்கிக்கொண்டார்கள்.

புதுவையைப்பற்றி டெல்லியில் இருந்து வந்தவர்களுக்கு எதுவும் தெரியாது. சட்டம் ஜனாதிபதிக்கும், சாதாரண மனிதனுக்கும் ஒன்றுதான்.

தமிழகத்தில் மின்சார பஸ்கள் ஓடத்தொடங்கி உள்ளன. புதுவையிலும் மின்சார கார், பஸ்கள் ஓடவேண்டும். எனவே தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய பஸ்களை ஓரங்கட்டிவிட்டு மின்சார பஸ்களை இயக்க முன்வரவேண்டும். இதற்கு மானியம், வரிவிலக்கு தர தயாராக உள்ளோம். அதை நீங்கள் தனியாக செய்ய வேண்டும் என்றாலும் செய்யலாம் அல்லது அரசோடு சேர்ந்து செய்யவேண்டுமென்றால் அதற்கும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

விழாவில் அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது:-

வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட், ஹெல்மெட் போடுவது அவசியம். பலர் ஹெல்மெட்டுக்குள் செல்போனை சொருகி வைத்து பேசியபடி செல்கின்றனர். ஹெல்மெட் அணிவதை கட்டாயம் என்றால் மக்கள் எதிர்க்கிறார்கள்.

மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் நிறைவேற்ற முடியாது. மற்ற நாடுகளில் சட்டம் கடுமையாக உள்ளது. ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை. எனவே இவற்றையெல்லாம் மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் பேசினார்.

விழாவில் எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம், ஜான்குமார் எம்.எல்.ஏ., போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, போக்குவரத்து துறை செயலாளர் சரண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால், சாலைப்போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com