

மும்பை,
மும்பையில் மின்சார ரெயில், பெஸ்ட் பஸ் சேவைகளுக்கு அடுத்தபடியாக டாக்சி மற்றும் ஆட்டோக்களை தான் மக்கள் போக்குவரத்து தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் பலரும் பயணிகள் அழைக்கும் குறைந்த தூர பயணத்திற்கு அவர்களை ஏற்றி செல்வதில்லை.
இதுதவிர பல டிரைவர்கள் தங்களுக்கான சீருடை மற்றும் பேட்ஜ் அணிவது கிடையாது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்தநிலையில், குறைந்த தூரத்தை காரணம் காட்டி சவாரிக்கு செல்ல மறுத்த 768 ஆட்டோ, டாக்சி டிரைவர்களின் உரிமத்தை வட்டார போக்குவரத்து அலுவலகம் அதிரடியாக ரத்து செய்து உள்ளது.
அதிகப்பட்சமாக வடலா வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 708 ஆட்டோக்கள் மீதும், 291 டாக்சிகள் மீதும் என 999 புகார்கள் வந்தன. இதில், 495 டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அடுத்ததாக தார்டுதேவ் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்த 415 புகாரில், 273 டிரைவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.