மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் 2 நாள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. நேற்று நடந்த உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி, போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர். கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜய பாஸ்கர், மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு, சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கமல்பந்த், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்த எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி விரிவாக ஆலோசித்தார். ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது தலைமையிலான கூட்டணி அரசு அமைந்ததும் கடந்த ஆண்டு(2018) ஜூன் மாதம் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தேன். அப்போது போலீஸ் அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளையும், சில நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டு இருந்தேன். நான் கூறியபடி போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். மாநிலத்தில் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 9 மாதங்களில் போலீஸ் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டம்-ஒழுங்கில் எந்த பாதிப்பும் இல்லை. போலீஸ் துறையின் செயல்பாடுகளை மக்களே பாராட்டி வருகின்றனர்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு, மக்களுக்கான பாதுகாப்பு குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். மக்களை பாதுகாக்கும் பொறுப்பு போலீசாருக்கு உள்ளது. அதனை உணர்ந்து பணியாற்றும்படி போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். சாதாரண ஒரு நபர் எந்த விதமான தயக்கமும் இன்றி போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளிக்கும் நபருக்கு நியாயம் கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளேன்.

நாடாளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளேன். சமூக வலைத்தளங்களில் சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வதந்திகள் பரப்பப்படுகிறது. தற்போது இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிகளவில் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவுகிறது. இதுபோன்ற வதந்திகள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவதை தடுக்கவும், இந்த பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. கூடிய விரைவில் வதந்தி பரப்புவதை தடுக்க சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்வது அதிகரித்து வருவதாக ஏராளமான தகவல்கள் வருகின்றன. அதனால் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை ஒடுக்கும் படியும், அந்த செயல்களில் ஈடுபடும் கும்பலை கைது செய்யவும், குறிப்பாக எங்கிருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகிறது என்பதை கண்டறியும்படியும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். நிழல் உலக தாதாவை ரவி பூஜாரியை செனகல் நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். ரவி பூஜாரியை கர்நாடகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளில் மத்திய அரசுடன் சேர்ந்து கர்நாடக போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் பெங்களூரு போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன், தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை, லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு தியாகராஜன் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்துகொண்டனா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com