கிருஷ்ணகிரியில் மண்டல அளவிலான ஆக்கி போட்டி

கிருஷ்ணகிரியில் மண்டல அளவிலான ஆக்கி போட்டியை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேற்று தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரியில் மண்டல அளவிலான ஆக்கி போட்டி
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மண்டல அளவிலான உலகத்திறனாய்வு ஆக்கி போட்டிகள் மற்றும் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இந்த போட்டிகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசியதாவது:-

2017-18-ம் ஆண்டிற்கான வேலூர் மண்டல அளவிலான ஆக்கி போட்டிகள் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் வேலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து 80 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். போட்டியில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெரும். அதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் தடகளம், நீச்சல், கால்பந்து மற்றும் ஹேண்ட்பால் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் வயது வரம்பின்றி அனைத்து வயது பிரிவினருக்கும் நடத்தப்பட உள்ளது.

தமிழக அரசு விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கி உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளையாட்டு துறைக்கு கடந்த 5 மாதத்தில் மட்டும் ரூ.5 கோடிக்கும் மேல் ஊக்க தொகை வழங்கி உள்ளார். அதேப்போல உணவுப்படி ரூ. 75-ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 29 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகிறது. நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மக்கள் அதிகம் உள்ள இடங்களில் 50 விளையாட்டு மைதானங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் தென்னரசு, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கேசவன், கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, முன்னாள் துணை தலைவர் வெங்கடாசலம், மற்றும் மண்டல முதுநிலை மேலாளர் புகழேந்தி, கைப்பந்து பயிற்றுனர் தினகரன் மற்றும் ஆக்கி பயிற்றுனர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com