கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு 2,700 தானிய மூட்டைகள் வந்தன - விலை நிர்ணயம் செய்யாததால் விவசாயிகள் கவலை

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நேற்று 2,700 தானிய மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்யப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு 2,700 தானிய மூட்டைகள் வந்தன - விலை நிர்ணயம் செய்யாததால் விவசாயிகள் கவலை
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இந்த விற்பனைக்கூடத்துக்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்த தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வது வழக்கம். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த சில நாட்களாக விவசாயிகள் யாரும் வரவில்லை. இந்த நிலையில் நேற்று 900-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எள், மக்காச்சோளம், மணிலா, உளுந்து, ராகி, கம்பு, துவரை உள்ளிட்ட சுமார் 2,700 தானிய மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அவற்றை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்தனர்.

ஆனால் ஒரே நேரத்தில் ஏராளமான விவசாயிகள் வந்ததால், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் நிலவியதால் வியாபாரிகள் தானியங்களுக்கான விலையை நிர்ணயம் செய்யவில்லை. மேலும் நாளை (அதாவது இன்று) தானியங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறி விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் தானியங்களை விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வருகிற 20-ந் தேதி முதல் தினசரி சராசரியாக 250 (லாட்டுகள்) விவசாயிகளுக்குரிய தானியங்கள் மட்டுமே விற்பனைக்காக எடுத்துக் கொள்ளப்படும். எனவே விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தில் டோக்கன் பெற்று, அதன்படி விளைபொருட்களை கொண்டு வரவேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com