

கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே காரனூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரி தூர்ந்து போனதோடு, மதகுகளும் சேதமடைந்தது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைக்கமுடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று பெரிய ஏரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கி குடிமராமத்து பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஏரியை தூர்வாரி மதகுகளை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.