சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் - நாளை நடக்கிறது

சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் - நாளை நடக்கிறது
Published on

கோவை,

தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், பி.ஆர்.நடராஜன் எம்.பி., காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மோகன்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தேவராஜ், திராவிடர் கழகத்தை சேர்ந்த சிற்றரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த முகமது பஷீர், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் இலக்கியன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாபு, கொ.ம.தே.க. மாவட்ட செயலாளர்கள் தனபால், பிரேம்குமார், ஆதித்தமிழர் பேரவை ரவிக்குமார், எஸ்.டி.பி.ஐ. ராஜா உசேன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் நாச்சிமுத்து, நந்தகுமார், வக்கீல் அருள்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்து உள்ள 100 சதவீத சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு பிரான்சு நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகள் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது.இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், அனைத்து தரப்பு மக்கள், தொழில்துறையினர், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பெருவாரியாக கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com