பாலியல் புகார் குறித்து நடிகர் நானா படேகரிடம் மீண்டும் விசாரணை: நடிகை தனுஸ்ரீதத்தா, கமிஷனருக்கு கோரிக்கை

பாலியல் புகாரில் நடிகர் நானா படேகரிடம் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என நடிகை தனுஸ்ரீதத்தா மும்பை போலீஸ் கமிஷனருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பாலியல் புகார் குறித்து நடிகர் நானா படேகரிடம் மீண்டும் விசாரணை: நடிகை தனுஸ்ரீதத்தா, கமிஷனருக்கு கோரிக்கை
Published on

மும்பை,

பிரபல இந்தி நடிகரான நானா படேகர் காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார். இவர் கடந்த 2008- ம் ஆண்டு `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட போது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீதத்தா குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் இந்த திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தனுஸ்ரீதத்தா கொடுத்த புகாரின் பேரில் நடிகர்கள் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகியோர் மீது ஒசிவாரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை போலீசார் சமீபத்தில் தனது அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில் பாலியல் புகாரில் நானா படேகருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும், எனவே விசாரணையை முடித்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது புகார் குறித்து மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என்று நடிகை தனுஸ்ரீதத்தா தனது வக்கீல் மூலம் மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வேவுக்கு இ-மெயில் அனுப்பி உள்ளார்.

அதில், போலீசார் நடந்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை. மேலும் நடிகர் நானா படேகருக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாகவோ அல்லது அச்சம் காரணமாகவோ அவரை கைது செய்யவில்லை. பல்வேறு ஆதாரங்களை வழங்கிய பின்னரும் போலீசார் வழக்கை முடித்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பாக மீண்டும் புதிதாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com