கோடநாடு வழக்கில் தொடர்புடைய ஷயான் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோடநாடு வழக்கில் தொடர்புடைய ஷயான் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கோடநாடு வழக்கில் தொடர்புடைய ஷயான் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 24.4.2017 அன்று காவலாளி ஓம்பிரகாஷ் படுகொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஷயான், மனோஜ், திபு, பிஜின், மனோஜ்சாமி ஆகிய 5 பேர் கோவை மத்திய சிறையில் உள்ளனர். மீதம் உள்ள 5 பேர் ஜாமீனில் வெளியே இருக்கின்றனர். இதற்கிடையே கடந்த ஆண்டு உதயகுமார், சதீசன், திபு, சம்சீர் அலி, மனோஜ் ஆகிய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சரியான முகாந்திரம் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி குண்டர் தடுப்பு சட்டத்தில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கோடநாடு வழக்கில் தொடர்புடைய ஷயான் சாட்சிகளை மிரட்டியதாக புகார் எழுந்தது. இது தவிர மேலும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ள அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு பரிந்துரை செய்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஷயானை கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் இருக்கும் ஷயானிடம் வழங்கப்பட்டது. மேலும் நகல்கள் குடும்பத்தினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் இன்னும் ஒரு வருடத்துக்கு அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com