மராட்டியத்தில் ஊரடங்கில் தளர்வு உணவகங்கள், பார்கள் திறப்பு

மாநில அரசு அனுமதி அளித்ததை அடுத்து மராட்டியத்தில் நேற்று உணவகங்கள், பார்கள் திறக்கப்பட்டன.
மராட்டியத்தில் ஊரடங்கில் தளர்வு உணவகங்கள், பார்கள் திறப்பு
Published on

மும்பை,

கொரோனா பிரச்சினை காரணமாக மராட்டியத்தில் கடந்த மார்ச் இறுதி முதல் உணவகங்கள், பார்கள் மூடப்பட்டு இருந்தன. உணவகங்களில் பார்சல் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தது. எனவே உணவகங்களை மீண்டும் திறக்க வேண்டும் என உணவக உரிமையாளர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் மாநில அரசு கடந்த 30-ந் தேதி உணவகங்கள், பார்களை திறக்க அனுமதி வழங்கியது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இதில் உணவகங்களில் சாப்பிட்ட 50 சதவீத வாடிக்கையாளர்கள் தான் அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தன.

30 சதவீதம் திறப்பு

இதை அடுத்து நேற்று முதல் மராட்டியத்தில் உணவகங்கள், பாகள், வணிக வளாக புட்கோர்ட்கள் திறக்கப்பட்டன. எனினும் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று முழுமையாக உணவகங்கள் திறக்கப்பட வில்லை. ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான உணவகங்கள் செயல்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து மேற்கு இந்திய ஓட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் பிரதீப் ஷெட்டி கூறியதாவது:-

உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பது உணவக உரிமையாளர்களுக்கு நிம்மதியை அளித்து உள்ளது. இது நல்ல வளர்ச்சி தான். ஆனால் உடனடியாக அனைத்து உணவகங்களும் திறக்கப்படவில்லை. திங்கட்கிழமை (நேற்று) 30 சதவீத உணவகங்கள் தான் திறந்து இருக்கும் என நினைக்கிறோம். மற்ற உணவகங்கள் இந்த மாதத்திற்குள் திறக்கப்படும். உணவகங்கள் கடந்த சில மாதங்களாக மூடியே கிடந்து உள்ளன. எனவே உணவகங்களில் சீரமைப்பு பணிகள் உள்ளிட்டவைகள் செய்ய வேண்டி உள்ளது. பலருக்கு நிதி பிரச்சினையும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உணவகங்கள் திறக்கப்பட்டதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அடுத்த 15 நாளில் அனைத்து உணவகங்களும் திறக்கபடும் என இந்திய ஓட்டல் மற்றும் உணவக உரிமையாளர் சங்க தலைவர் சிவானந்த் ஷெட்டி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com